புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

வியாழன், 3 மார்ச், 2011

இவனல்லவோ தலைவன்! - தொழிலாளர்களின் கண்காணிப்பாளர் லூயி உருசுவா-வும் & சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா-வும்
சிலி என்ற சின்னஞ்சிறிய நாடு. தென் அமெரிக்காவில் இருக்கும் இந்த நாடு, செய்திகளில் பிரபலமாக அடிபடும் வகையில் எந்த அம்சத்தையும் கொள்ளாத நாடு என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட சிலியை இன்று உலகமே சிலிர்த்து நோக்குகிறது. அப்படி என்ன, அமெரிக்காவைப்போல் அக்கப் ‘போரில்’ வெற்றி பெற்றார்களா? இல்லை, பொருளாதார முன்னேற்றத்தில் சீனாவைப் போல் சாதித்தார்களா? இல்லை, ராக்கெட் விட்டார்களா? ரெஸ்லிங்கில் ஜெயித்தார்களா? எதுவுமே இல்லை. உலகத்தின் சக்திவாய்ந்த அத்தனை பத்திரிகைகளும் ஒருசேர வாய்பிளந்து பாராட்டும் அளவுக்கு என்ன செய்து விட்டார்கள் - இந்த நாட்டு மக்கள்?
சான் ஜோஸ் என்ற தங்க & தாமிரச் சுரங்கத்தில் அரை கிலோமீட்டர் ஆழத்தில் புதைபட்டுவிட்ட 33 சுரங்கத் தொழிலாளர்கள் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டிருக்கிறார்கள் -அதுவும் சுமார் 70 நாட்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்த பின்னர்! 500 மீட்டர் ஆழத்தில் 33 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத நிலச்சரிவில் ஒரு லட்சம் டன் எடையுள்ள பூதாகரமான பாறை அந்த சுரங்கத்தை சுத்தமாக மூடிவிட்டது. 33 பேரும் உயிருடன் இருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ளவே 17 நாட்கள் ஆயிற்று. அதுவரை வெளியுலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான உணவையும் தண்ணீரையும் வைத்து, அந்த 17 நாட்களும் தினமும் ஒரு கடி உணவும், சில சொட்டுத் தண்ணீரும் குடித்து 18-ம் நாள் உதவி வரும் வரை சமாளித்திருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்களின் கண்காணிப்பாளர் லூயி உருசுவா (இவரும் அகப்பட்ட 33 பேரில் ஒருவர்), தலைவன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்திருக்கிறார். அந்தப் பசியிலும், உணவையும் தண்ணீரையும் முழுதாக முடித்துவிடாமல் வைராக்கியமாக இருக்கக் கடவுள் எங்களுக்குத் துணையிருந்தார் என்று நன்றி சொல்கிறார்.

பாறை அடைத்ததால் பூகம்பம் போல சுரங்கம் அதிர்ந்து அந்தத் தூசி மண்டலம் அடங்கவே மூன்று மணிநேரம் ஆகியதாம். இரண்டு நாட்களில் பாறையைக் குடைந்து வெளிவரலாம் என்று மற்றவர்கள் கருதியபோது, பதினைந்து நாட்களாவது ஆகும் என்பதைக் கணித்து, அதற்கேற்ப சக தொழிலாளர்களை மனரீதியாகத் தயார் செய்து அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறார். தன்கீழ் பணியாற்றும் மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காதவர் என்று பெயரெடுத்த உருசுவா, 18-வது நாள் சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேரா புதைபட்ட தொழிலாளர்களுடன் முதன்முதலில் தொடர்புகொண்டபோது, அவரிடம் வயர்லெஸ் மூலம் சொன்ன வார்த்தைகள்... ‘‘என் சக பணியாளர்களை கைவிட்டு விடாதீர்கள்.’’
625 மீட்டர் பாறையைக் குடைந்து ஒரு இயந்திரக் கூண்டை உள்ளே செலுத்தி அக்டோபர் 12 அன்று 33 தொழிலாளர்களையும் மீட்டார்கள். ஒவ்வொருவராகத்தான் இந்தக் கூண்டிலேறி வரமுடிந்தது. அதுவும் ஒருமுறை கூண்டு மேலே வர 11 நிமிடமாகியதாம். 22 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொருவராக உயிருடன் வெளிவரும்போது வெளியில் கூடியிருந்த அவர்தம் குடும்பத்தினரும் பொதுமக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தார்கள். அத்தனை தொழிலாளர்களையும் ஒவ்வொருவராக மேலே அனுப்பிவிட்டு கடைசியாக, முதல் தொழிலாளி மேலேறி வந்ததிலிருந்து 22 மணி நேரம் பொறுமையாகக் காத்திருந்து கடைசியாக மேலேறி வந்தாராம் உருசுவா & இவனல்லவா தலைவன்!
தன்னலம், தன் குடும்ப நலம், தன் கட்சி நலம் என்று ஏதோ ஒருவகை சுயநலத்திற்காக எவரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் இந்தக் காலகட்டத்தில், தனக்குக் கீழே பணியாற்றிய தொழிலாளர்களை அந்தக் கடினமான சூழ்நிலையிலும் வழிநடத்திக் காப்பாற்றிய உருசுவா மனிதர்குல மாணிக்கம். அந்த நாட்டின் அதிபர், அந்த 52 நாட்களும் தினமும் காலையிலும் மாலையிலும் புதையுண்ட தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டே இருந்தாராம். அவர்களின் நலம் விசாரிப்பதற்கு மட்டுமில்லாமல், அவர்களின் நம்பிக்கையை வளர்க்கவும்தான். இப்படியும் ஒரு தேசத்தலைவர். எனக்கு ஆயிரத்தெட்டு அலுவல்கள் என்று சொல்லி கீழேயிருக்கும் அதிகாரிகளிடம் விட்டுவிட்டு ‘குளிர்காயாமல்’ தன் குடிமக்களில் 33 பேருக்கு ஏற்பட்ட ஆபத்தை நாட்டிற்கே ஏற்பட்ட ஆபத்தாய்க் கருதி செயல்பட்ட பினேரா ஒரு அதிசயத் தலைவர்.

ஹெல்மெட்டின் பாட்டரி வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமே இல்லாதபோதும் அந்த வெளிச்சத்தையும் ரேஷன் முறையில் பாதுகாத்ததுடன், தொழிலாளர்களுக்கு ஜோக்குகளும் கதைகளும் சொல்லி அவர்களை மன உளைச்சலால் பாதிக்கப்படாமல் காப்பாற்றினார் உருசுவா என்றால்... இந்த மீட்புப் பணியைத் தலையாய வேலையாய்க் கருதி தானே தலைமை வகித்து வெற்றி பெற்றார் பினேரா. இருவருமே மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வழிகாட்டிகள். இந்த 33 பேர் உயிருக்காக பிரார்த்தனை செய்து தொலைக்காட்சி முன் கவலையுடன் உட்கார்ந்திருந்த சிலி நாட்டு மக்கள் அனைவரும், இன்னமும் உலகில் மனிதத்துவம் மறைந்து விடவில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் & அதுவும் தமிழ்நாட்டில் இத்தகைய சம்பவம் நடைபெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஒரு தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருப்பார். அல்லது அண்ணா சமாதியில் அரைநாள் ஏர்கூலர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பார். இன்னொரு தலைவர் ஆட்சியாளர்கள் கடமை தவறியதைப்பற்றி பக்கம்பக்கமாக அறிக்கை வெளியிட்டிருப்பார் அல்லது இரண்டு மணிநேர தர்ணா நடத்தியிருப்பார்கள். எதிர்க்கட்சிகள் பந்த் அறிவிப்பார்கள். அது வெற்றி பெறாமல் இருக்க அரசாங்கமே பந்த் அறிவித்துவிடும்.

இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அரைமணிக்கு ஒருதடவை எங்கோவொரு மூலையில் நடைபெறும் சாமியாரின் மன்மதலீலைகளைப் ‘படம்போட்டுக்’ காண்பிக்கும் நமது சேனல்கள். இதையெல்லாம் மீறி அந்தத் தொழிலாளர்கள் மீண்டு வந்துவிட்டால், தங்கள் கட்சித் தலைவர்களை எல்லா மதத்துக் கடவுளர்களாகவும் சித்திரித்து டிஜிட்டல் பிளெக்ஸ் வைத்து மகிழ்வார்கள் பகுத்தறிவுக் கட்சித் தொண்டர்கள்.

நல்லவேளை & இந்த நிகழ்ச்சி சிலி நாட்டில் நடந்தது. நமக்கெல்லாம் ஒரு நாடகம் மிச்சம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக